புதன், 7 ஆகஸ்ட், 2013

காயம்


இன்றைக்கு நாம் அவ்வப்போது எதிர்கொள்கிற சமாசாரம் பார்க்கலாம். இதில் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவற்றை கையாள உதவியாக இருக்கும்.
யாரும் வாழ்கையில் அடி படாமல் இருக்க மாட்டார்கள். சிலர் சின்ன அடிக்கே குய்யோ முறையோ என்று ஊரை கூட்டுவார்கள். சிலர் பெரிய அடி பட்டு ரத்தம் வந்தால் கூட தட்டிவிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்!

எப்போதுமே உடம்பு தேவையான நடவடிக்கையை எடுத்துக்கொண்டே இருக்கிறது. அது சில சமயம் மட்டும் நமக்கு பிரச்சினை தருவதாக அமையும். பல சமயங்களில் அது சரியாகவே இருக்கும். அது நமக்கு புரிவதில்லை.

மருந்து சாப்பிடுவது எல்லாம் உடம்புக்கு ஒரு கூடுதல் சப்போர்ட்தானே ஒழிய முக்காலே மூணு வீசம் உடம்பேதான் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது.
கீழே விழுகிறோம் அடி பட்டு விடுகிறது. மேல் காயம் இல்லாவிட்டால் செய்யக்கூடியது ஐஸ் பேக் வைப்பதுதான். இல்லையானால் குளிர்ந்த நீர். இது அங்கே ஏற்படக்கூடிய வலியையும் வீக்கத்தையும் குறைக்கும்.

ரத்தம் கசிந்தால் என்ன செய்வது?
பயமே வேண்டாம்.
அதன் மேலே ஏதேனும் துணி, காகிதம் எதுவும் இல்லாவிட்டால் நம் கையையே கூட - வைத்து நன்றாக அழுத்த வேண்டும். சுமார் 2 நிமிடங்கள் கழித்து அழுத்தத்தை நீக்கி விட்டு பார்த்தால் அனேகமாக ரத்தப்போக்கு நின்றிருக்கும். உடம்பில் முக்கிய தமனியான அயோர்டாவும் அதன் நேரடி கிளைகளும் தவிர அழுத்தத்துக்கு நிற்காத ரத்த நாளம் கிடையாது! சிரை (vein) அல்லாமல் தமனி (artery) ஏதேனும் வெட்டுப்பட்டால் கூடுதல் நேரம் தேவைப்படலாம் அவ்வளவே!

இந்த அழுத்தம் சரியாக கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக கத்திக்குத்து காயம் வயிற்றுக்குள் ஏற்பட்டால் வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் சரியாக இராது. அதனால் இப்படி வேலை செய்யாது.

சில இடங்களில் ஏற்படும் காயம் அபரிமிதமாக ரத்தப்போக்கை உருவாக்கும். பொதுவாக தலை, முகம் ஆகியவற்றில் ஏற்படும் காயங்கள் இந்த வகையை சேர்ந்தவை. பொதுவாக எங்கும் காயம் ஏற்பட்டால் பரபரவென்று தேய்த்து விடுவது பரவலான பழக்கம். அது ரத்தப்போக்கை நிறுத்தாது. மாறாக அதிகமாக்கலாம்.

படிப்பு முடித்து ஒரு வருஷம் ஒரு நர்சிங் ஹோமில் வேலை பார்த்தேன். ஒரு நாள் மதிய நேரம் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு அம்மா அரக்க பரக்க ஓடி வந்தார்கள். அவருடைய சேலையெல்லாம் ரத்தம். குழந்தை தலையை மூடிய வெள்ளை துண்டு சிவப்பாக மாறி இருந்தது. அழுதுக்கொண்டு இருந்த குழந்தையையும் அம்மாவையும் சமாதானப்படுத்தி உக்கார வைத்து விசாரித்ததில் குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டுக்கொண்டதாக தெரிந்தது. துண்டை எல்லாம் துக்க்கிப்போட்டு விட்டு பார்த்ததில் எங்கும் ரத்தப்போக்கை காணோம்! ஒரு சீப்பு கொண்டு வரச்சொல்லி தலை முடியை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி காயத்தை கண்டு பிடித்தேன். சுமார் 2 மி.மீ தான் இருந்தது. ரத்தப்போக்கும் நின்று இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என்று அந்த அம்மாவை நம்ப வைக்க நிறையவே பாடுபட வேண்டி இருந்தது. இவ்வளோ சின்ன காயம் எப்படி அவ்வளவு ரத்தம் வர முடியும் என்று கேள்வி! வந்ததே! என்ன செய்வது?

காயத்தில் ரத்தம் வந்துவிட்டால் காயம் சீக்கிரம் ஆறிவிடும். சில சமயம் மேல் தோல் மட்டும் வழண்டு போய் ரத்தம் வராமலே இருக்கும். இதுக்குத்தான் இன்னும் அதிக கவனம் கொடுத்து மருந்து போட்டு மூட வேண்டும். சுலபமாக இன்பெக்ட் ஆகிவிடும். காயங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேன்டும் என்று ஒரு கருத்து இருக்கிறது. அபப்டி இல்லை, ஈரமாகவே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயத்தை 3 ஆம் நாளில் இருந்து சோப் போட்டு கழுவலாம், தொட முடிந்தால்! :-) சுத்தப்படுத்திவிட்டு காய வைக்க வேண்டும். காயம் ஈரப்பதத்துடன் இருக்கும் வரை மேலே ட்ரெஸ்ஸிங் போடலாம். காய்ந்த பிறகு தேவையில்லை. காயும் போது பொருக்கை பிய்த்து போட கை பரபரத்தாலும் அதை செய்யக்கூடாது. தோல் நகரும் இடங்களான கை கால் முட்டிகளில் காயம் ஆற நாளாகும். பொறுமை வேண்டும். வயதானவர்கள் ஒரு வாரத்துக்குள் காயம் ஆறும் அறிகுறி இல்லை என்றால் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டும். டயபெடிஸ் திருட்டுத்தனமாக வந்து இருக்கலாம்!

ஞாயிறு, 28 ஜூலை, 2013

வாக்கிங்!

வாக்கிங்!
இன்றைய நாளில் பலருக்கும் அவசியமான நோய் தடுக்கும் ஆரோக்கிய சாதனம் இது!
நம் வாழ்க்கை முறை கடந்த 40-50 வருடங்களில் வெகுவாகவே மாறிவிட்டது. பள்ளியில் படித்த போது நாங்கள் பள்ளிக்கு நடந்தே சென்றோம். நடந்தே திரும்பி வந்தோம். உணவு இடைவேளையில் சீக்கிரமாக உண்டுவிட்டு விளையாடுவோம், விளையாடுவோம், விளையாடுவோம்.... பெல் அடிக்கும் வரை. உடற்பயிற்சி அவ்வளவு இருந்தது.

இப்போது பள்ளிக்கு செல்வது சொந்த வாகனம் வாங்கும் வரை ஆட்டோ மாதிரி ஒரு ஏற்பாட்டில். நடந்து போக நினைத்தாலும் ஏது நேரம்? பாடங்களை எழுதி படித்து முடித்து ஏதேனும் வயிற்றுக்கு இட்டுக்கொள்ளவே நேரமில்லை.

பள்ளியில் வைட்டமின் டி நமக்கு சூரிய ஒளியில் உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று படித்தோம் இல்லையா? நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஏறத்தாழ ஆண்டு முழுதும் சூரிய ஒளி மிகுந்த நாட்களாகவெ இருப்பதால் நமக்கு அதன் குறைபாடு -டிபிசியன்சி - வராது என்று ஒரு கருத்து இருந்தது.

ஆமாம். இருந்தது. இப்போது இல்லை! இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் நம்மில் பலருக்கும் அந்த குறைபாடு இருக்கிறது என்று சொல்கின்றன. காரணம் நம் வாழ்கை முறை. எங்கே போனாலும் ஏதேனும் ஒரு வண்டியில் போகிறோம். பக்கத்து தெரு என்றால் கூட நடந்து போய் வரலாம் என்று நினைப்பதில்லை! குறைந்தது ஒரு டூ வீலர் தேவையாக இருக்கிறது! வெயிலில் போனால் சருமம் கருத்துவிடும் என்று க்ரீம் பூசிக்கொள்பவர் அதிகமாகி வருகிறார்கள். டிவிசி உபயம்! அதனால் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இது குறைவதற்கும் டயபெடிஸ் வருவதற்க்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் டி கொடுத்து வந்தால் டயபெடிஸ் வெளிப்படுவது தாமதமாகிறது என்கிறார்கள். இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சிகள் நடக்கின்றன; நாம்தான் நடப்பதில்லை.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ரத்தத்தில் வைட்டமின் டி அளவை பரிசோதியுங்கள். இது இன்னும் பல டாக்டர்களுக்கும் கூட தெரியவரவில்லை!

என் டாக்டர் நண்பரின் அப்பாவுக்கு தீராத இடுப்பு வலி இருந்தது. கடைசியாக ஒரு சீனியர் டாக்டரை போய் பார்த்தார். அவர் பொது மருத்துவர்தான்! அது வரை துறை நிபுணர்கள் பல பேர் பார்த்து நிறைய எக்ஸ்ரே எல்லாம் எடுத்து என்னென்னமோ மருந்து எல்லாம் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொண்டு என்று எல்லாம் ஆகிவிட்டது! இவரோ சோதனைகளை முடித்துவிட்டு சொன்னது - "உங்களுக்கு ஒரு மருந்தும் தேவையில்லை. தினமும் 2 கிலோமீட்டர் நடங்கள். அது போதும்!" மூன்று மாதத்தில் சரியாகிவிட்டது!

உடல் பருமனை குறைக்க நடக்க வேண்டி இருக்கிறது. இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் கூட நடக்க வேண்டி இருக்கிறது. சின்ன வயசில் நடந்து பழகாவிட்டால் வயதான பிறகு காசு செலவழித்து வீட்டில் வாக்கிங் மெஷின் வாங்கி வைத்து நடைபழக வேண்டி இருக்கிறது!  தினசரி ஒரு மணி நேரம் நடந்தால் டயபெடிஸ் (இரண்டாம் வகை) வரும் வாய்ப்பு 50% குறையும்; இதய நோய்கள் வரும் வாய்ப்பு 30 - 40% குறையும்; பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வாய்ப்பு 20% குறையும் என்றெல்லாம் சொல்கிறார்கள்!

நடப்பது மிக எளிதாக எல்லாரும் செய்யக்கூடிய உடற் பயிற்சி. குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். மாலை வெயிலில் நடப்பது மேலே சொன்ன காரணத்துக்காக நல்லது. வீட்டுக்கு வெளியே கிளம்பி குறைந்தது வேர்க்க ஆரம்பிக்கும் வரை வேகமாக நடக்க வேண்டும். பின் வீட்டுக்கு திரும்பலாம். வீடு நெருங்க நெருங்க வேகத்தை குறைத்துக்கொள்ளலாம். இப்படி நடக்கும்போது உடல் தன் அடிப்படை வளர்சிதை மாற்ற (மெடபாலிச) வேகத்தை அதிகமாக்கிக்கொள்கிறது. உணவு செரிமானம், செல்கள் புதுப்பித்தல் போன்ற பல வேலைகள் துரிதமாகும்.

நடக்கும் இடம் கூடிய வரை சுத்த காற்று கிடைக்கும் இடமாக இருக்கலாம். பார்க், பீச், மைதானம் நல்லது. அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் ரோடில் நடக்கலாம். ரோடில் எப்படி நடக்க வேண்டும்? ப்ளாட்பார்ம் நடக்கும் படியாக இருந்தால் அதில். இல்லாவிட்டால் ரோட் ஓரமாக.

இடது பக்கம் நடந்தால் வேகமாக நடக்கும் போது எதிரில் இருக்கும் எதையாவது தவிர்க்க திடீர் என்று வலப்பக்கம், இடப்பக்கம் நகர்ந்து நடக்க வேண்டி இருக்கும். அப்போது பின்னால் வரும் வண்டி நம் மேலே மோத வாய்ப்பு உண்டு. ரோடின் வலது புறமாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால் எதிரில் வரும் வண்டிகள் நம் பார்வையில் இருக்கும். நடக்க பாதுகாப்பு இருக்கும்.  எனக்குத்தெரிந்த டாக்டர் ஒருவர் சில நாட்களுக்கு முன் வாக்கிங் போகும் போது கத்துக்குட்டி ஆசாமி டிவிஎஸ் இல் பின்னால் வந்து மோதிவிட்டான்!

இரவில் வாக்கிங் போவதானால் கையில் பாதுகாப்புக்காகவும் ரோடை நன்றாக பார்க்கவும் கையில் ஒரு கனமாக டார்ச் எடுத்துப்போங்கள்! காலியில் வாக்கிங் போகிறவர்கள் எந்த கட்சியிலும் இல்லாமல் இருப்பது நல்லது! :-)

இன்னும் நிறைய விஷயங்கள் எழுதிக்கொண்டே போகலாம். முடிவு இராது!

55 வயசாகும் வரை, டயபெடிஸ் வரும் வரை என்றெல்லாம் காத்திருக்காமல் இன்றே நடக்க ஆரம்பிக்கலாம்!

புதன், 24 ஜூலை, 2013

ஒப்புதல் (கன்சன்ட் )


ம்ம்ம்ம்ம் நேரம்ன்னு ஒரு வஸ்து எங்கே கிடைக்கும்ன்னு தெரியலை. போகட்டும்.

கன்சன்ட் பத்தி எழுத ஆரம்பிச்சேன். ஏதேனும் ஆபரேஷன் அல்லது டயக்னாஸ்டிக் ப்ரொசீசர் செய்துக்கப்போனா ஒரு ஒப்புதல் படிவத்தை கை எழுத்து போட்டுக் கொடுக்கச் சொல்லுவாங்க. நாமளும் சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணறா மாதிரி படக்குன்னு ஒக்கேன்னு கை எழுத்து போட்டுடுவோம். அப்புறம் ப்ரௌசரை திறக்கறப்ப வலுக்கட்டாயமா வர சர்ச் பார் மாதிரி, அப்புறமா ஏதாவது நமக்கு பிடிக்காதது தெரியவரலாம். ஜாக்கிரதையா இருக்கணும். 18 வயசுக்கு மேலே ஆகி, படிக்கவும் தெரிஞ்ச ஆசாமி கோர்ட்ல "என்ன எழுதி இருந்ததுன்னு தெரியாது. கை எழுத்து போடச்சொன்னாங்க, நான் பாட்டுக்கு கை எழுத்து போட்டேன்" ன்னு சொன்னா அது எடுபடாது. நமக்கு புரியாத மொழில கன்சன்ட் எழுதி இருந்தா, கை எழுத்து போடச்சொல்லறவங்களை அதில என்ன எழுதி இருக்குன்னு சொல்லச்சொல்லணும்.

சின்ன ப்ரொசீஜர்தானே ன்னு நாம பாட்டுக்கு தனியா போகக்கூடாது. அல்லது ஒரு பொடியனை கூட அழைச்சுகிட்டுப் போகக்கூடாது. கூட ஒரு ரெஸ்பான்சிபில் அடல்ட் இருக்கணும். மருத்துவத்துல எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம். ஊசி போட்ட பி 12 அலர்ஜி ஆகி போய் சேர்ந்தவங்க உண்டு.

மருத்துவ மனையில் ஆபரேஷன் சமயத்தில அரிதான நோய், காட்சி ன்னு இருந்தா மெடிகல் ஜர்னல்ல போடவோ அல்லது தன்னோட சேமிப்புக்கோ படம், விடியோ எல்லாம் எடுக்கிறதுண்டு. லேப்ராஸ்கோபி போன்ற ப்ரோசிஜர்ல இது எப்படியும் நடக்கும். அப்புறமா உங்களுக்கு சிடி கூட தருவாங்க. வம்பு தும்பு ஒண்ணும் வர சான்ஸ் இல்லைன்னாலும் இதை வேண்டாம்ன்னு சொல்ல உங்களுக்கு அதிகாரம் உண்டு.

இந்த கன்சன்ட்ல நாலு விஷயம் முக்கியம். முதலாவது சுயேச்சையா யாரும் வற்புறுத்தாம கை எழுத்து போடறோமா என்கிறது. வாசகம் அப்படித்தான் இருக்கும். இரண்டாவது கொடுக்கிற சிகிச்சை என்னன்னு நோயாளிக்கு புரிஞ்சுக்க திறமை இருக்கா என்கிறது. மூணாவது அப்படி நோய்க்கு தீர்வா சொல்லப்படுகிறதும் அதன் பின் விளைவுகளும் தெளிவா சொல்லப்பட்டனவா என்கிறது. நாலாவது நோயாளிக்கு இது எல்லாம் புரிஞ்சு முடிவு எடுக்கிற தன்மை இருக்கா என்கிறது. இந்த நாலிலே எது இல்லைன்னாலும் அது சட்டப்படி செல்லுபடியாகாது. இப்பல்லாம் சகட்டு மேனிக்கு கோர்ட்ல கேஸ் வரதால இதெல்லாம் ரொம்ப முக்கியமாயிடுத்து. ஒரு 30 வருஷம் முன்னே இப்படி இல்லை. நோயாளியோட தேவையை மருத்துவரே புரிஞ்சு கொண்டு நிறைவேத்தறதா இருந்தது.

இப்படி வாங்குகிற ஒப்புதல் சில சமயம் அடுத்து நடக்கக்கூடிய விஷயத்துக்கும் கூட சேர்த்து வாங்குகிறது உண்டு. முக்கியமா பிரவசத்துக்கு ஆஸ்பத்ரி போனால் சிலருக்கு சேருகிற போதே சிசேரியனுக்கு கன்சன்ட் கேட்பாங்க. எப்ப என்ன ஆகும், எப்ப படு அவசரமா தியேட்டர் கொண்டு போக வேண்டி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. அப்ப போய் யாருப்பா அடெண்டண்ட் ன்னு தேடுறது கஷ்டம். அவர் ஓட்டலுக்கு சாப்பிட போயிருப்பார். வேறெங்கானா போயிருப்பார்
 
சில சமயம் வயித்தை திறந்து பார்த்த பிறகே என்ன செய்யலாம்ன்னு முடிவு எடுக்க வேண்டி இருக்கும். அப்ப மயக்கத்தில இருக்கிற நோயாளிகிட்ட எப்படி கன்சன்ட் வாங்க முடியும்?
இப்படி எல்லாம் லீகலா எழுதிட்டேனே தவிர நடைமுறை சிக்கல்கள் நிறையவே இருக்கு!
முக்கால்வாசி பேஷண்டுக்கு எவ்வளோ சொன்னாலும் தப்பா புரிஞ்சுப்பாங்க! அதுவும் கான்சர் மாதிரி வியாதின்னா அவ்வளோதான்! அந்த நேரத்தில டாக்டர் சொல்லறது ஒண்ணுமே மண்டையில் ஏறாது! அவங்களே முன்னால முடிவு பண்ணி வெச்சிருக்கறத மட்டுமே டாக்டர் சொல்லறதா நினைப்பாங்க. டாக்டர் பாடு திண்டாட்டம்தான்.

எப்படியும் நோயாளிக்கு அவரோட நோயோட தன்மை, அதுக்கான சிகிச்சை, அதன் விளைவு, சிகிச்சை இல்லாட்டா என்னாகும் என்பது ... இதை எல்லாம் மருத்துவர் சொல்லணும் என்கிறது எதிர்பார்ப்பு! நீங்க டாக்டர்கிட்ட போனா இதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்குங்க!

வெள்ளி, 19 ஜூலை, 2013

இன்பார்ம்ட் கன்சன்ட்...

மெடிசின் பரிட்சை எல்லாம் முடிச்சு பாஸ் பண்ணி ஹவுஸ் சர்ஜனா பொறுப்பெடுத்துகிட்டு திரு திரு ன்னு முழிச்சுகிட்டு இருந்த காலம்..... சர்ஜரி டிபார்ட்மெண்ட்ல வேலை.

 ஒரு வயசான தாத்தா பேஷண்டுக்கு கான்சர். அப்போ அதுக்கு சிகிச்சை விரையை நீக்குவதுதான். அதுக்கு அட்மிட் ஆகி இருக்கார். ஹவுஸ் சர்ஜன் வேலை இன்பார்ம்ட் கன்சன்ட் வாங்கறதாச்சே! (நர்ஸ் சாதா கன்சன்ட் வாங்கிடுவாங்க.) நான் பேஷண்ட்கிட்டே போய் "தாத்தா! உனக்கு கான்சர் இருக்கு. அதுக்கு விரையை எடுத்துடணும். கன்சன்ட் பார்ம்ல கை எழுத்து போடு" ன்னு சொன்னேன்! அவரோ "என்னது? விரைய எடுத்துட்டா நான் செத்துடுவேனே!" ன்னு அழ ஆரம்பிச்சார். "அதெல்லாம் ஒண்ணும் சாக மாட்டே" ன்னு சொல்லிப்பாத்தேன். அழுகை நிக்கலை. சரி அப்புறம் பாத்துக்கலாம் ன்னு விட்டுட்டேன். அப்புறமா ரவுண்ட்ஸ் வந்த லெக்சரர்கிட்டே நர்ஸ் புகார் பண்ணி இருப்பாங்க போல. லெக்சரர் அவர்கிட்டே போய் "தாத்தா, ஒண்ணுமில்லே, அங்க ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணனும். விரய எடுக்க மாட்டேன்" ன்னு சொல்ல அழுகை நின்னுடுத்து. பார்ம்ல கை எழுத்து வாங்கிக்கிட்டு அடுத்த நாள் ஆபரேஷன் செஞ்சாச்சு! விரைல அதோட கவரை விட்டுட்டு உள்ளே இருக்கிறதை மட்டும் ஸ்கூப் பண்ணி எடுத்ததால அங்க ஏதோ இருக்குன்னு பேஷண்ட் எண்ணம்!

இந்த நிகழ்வு இன்னும் மனசுல நிக்குது. லீகலா இருக்கிற ஒரு சமாசாரம் எப்பவுமே நடைமுறைக்கு சரி வரும்ன்னு சொல்ல முடியாது. இதை எல்லாம் எப்படி ஹாண்டில் பண்ண முடியும்?

வரும் பதிவுகளில இந்த கன்சன்ட் சமாசாரம் கொஞ்சம் பார்க்கலாம். நிறைய இருக்கறதால மெதுவாத்தான் போட முடியும்.

வியாழன், 18 ஜூலை, 2013

மருத்துவம் - முதல் பதிவு

இன்னைக்கு நேரம் சரியில்ல போலிருக்கு. நேத்து கூகுள் ப்ளஸ்ல நடந்த ஒரு விவாதத்தை படிச்சுட்டு, முன்னேயே தலை தூக்கி தூக்கி அடங்குடா மவனே ன்னு அடக்கி அடக்கி வெச்சிருந்த எண்ணம் திருப்பி தலை தூக்கிடுத்து. மருத்துவம் சார் பதிவு போட முடிவு பண்ணிட்டேன். எல்லாம் என் போதாத காலம்! (உங்களுதும்தான்!)

சீரியஸா பதிவெல்லாம் போட ஆரம்பிக்கும் முன்னே சில எச்சரிக்கைகள். மருத்துவர்கள், மருத்துவ மனைகள் உடன் உறவாட நேர்ந்தால் (சின்னப்பசங்க சரியா புரிஞ்சுக்குங்கப்பா!) தவறான புரிதல் இருக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் பதிவுகள் எழுதுகிறேனே தவிர வேறு நோக்கமில்லை. இதெல்லாம் ஒரு கைட்லைன்னாக மட்டுமே இருக்க முடியும். இங்கே கணினி முன்னே உக்காந்துகிட்டு நோயாளி பத்தி எதையும் உண்மையாக சொல்ல முடியாது. ஆகவே இந்த பதிவுகளில் மருத்துவ தீர்வுகள் வாரா.

எந்த வைத்தியரின் கடமையும் நோயாளியின் நோயைப்பற்றி அவருக்கு புரியக்கூடிய எளிய வழியில் கொஞ்சமாவது சொல்ல வேண்டும் என்பது. இது இப்போது இருக்கிற சூழ்நிலையில் கடினமாகிக்கொண்டு வருகிறது. 50 - 60 வருடங்களுக்கு முன் வைத்தியரை நோயாளிகள் முழுக்க நம்பினார்கள். வைத்தியர்களும் வஞ்சனை இல்லாமல் நேரம் காலம் பாராமல் வைத்தியம் செய்தார்கள். யாரும் இறந்து போனால் வைத்தியம் பார்த்தும் இறந்து போயிட்டாங்க. கொடுத்து வெச்சது அவ்வளோதான் என்று சொல்லுவார்கள். பிரச்சினைகள் இல்லை. இப்போதோ மருத்துவ மனையை சேதப்படுத்தி/ பயமுறுத்தி காசு பார்க்கும் காலமாக இருக்கிறது!

நோய்கள் காம்ப்லெக்ஸ் ஆகிவிட்டன. அல்லது நோய்களின் தன்மையை புரிய வைப்பது காம்ப்லெக்ஸ் ஆகிவிட்டது. இருதயம் பழுதாகிவிட்டது என்று சொல்லலாம். இன்னும் மேலே இன்ன வால்வ் ப்ழுதாகிவிட்டது என்று சொல்லலாம். அதற்கு மேல் நுரையீரலில் அதன் தாக்கத்தை எப்படி புரிய வைப்பது? ஒவ்வொரு நோயாளிக்கும் - இன்னும் மோசம் அட்டெண்டண்ட் என்று சொல்லிக்கொண்டு வரும் ஒவ்வொரு ஆசாமிக்கும்- மருத்துவ பாடமா எடுத்துக்கொண்டு இருக்க முடியும். நடைமுறை சாத்தியமில்லை. என் கணினி பராமரிப்பாளர் ஹார்ட் டிஸ்க் போயிடுத்து சார் என்றால் நான் அதை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? சந்தேகம் இருந்தால் கணினியை இன்னொருவரிடன் கொண்டு போகலாம். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

நம்பிக்கை இல்லாமல் வைத்தியர் நோயாளி உறவு இருக்க முடியாது. சந்தேகம் இருந்தால் வேறு வைத்தியரை பாருங்கள். இது எப்போதுமே முடியாது - ஒரு அவசரத்துக்கு முடியாது- என்று தெரிந்தேதான் இருக்கிறது.

90 வயதாகும் என் மாமா சொல்லுவார். அவர் காலேஜ் படிக்கும் போது ஸ்டூடண்ட் என்றாலே ஒரு மதிப்பு இருந்ததாம்! அவரு ஸ்டூடண்டுங்க. அவரு தப்பு பண்ண மாட்டாரு/ அவரு சொன்னா சரியா இருக்கும் என்று சாதாரண மக்கள் சொல்வார்களாம். இப்படி நம்பிக்கை வைத்த கேட்டகரி எல்லாம் தேய்ந்து போய் இப்போது அப்படி பொதுவாக நம்பிக்கை வைக்கக்கூடியவர் யாரும் இல்லை என்றாகிவிட்டது.

மருத்துவர் சமுதாயம் ஏதோ தனியாக இல்லை. பாரதி பாடிய பாரத சமுதாயத்தில்தான் இருக்கிறது. இந்த பாரத சமுதாயத்தில் நாம் பார்க்கக்கூடிய நல்லது கெட்டது எல்லாமே இங்கேயும் இருக்கிறது. அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
நானாக எழுத நினைத்து இருப்பவை ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? கேளுங்கள். கூடிய வரை சொல்கிறேன்.

சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க மருத்துவர் மருத்துவ மனை பெயர்களை தவிர்த்துவிடுங்கள்.
ஆரம்பிக்கலாம்!